கோபி: வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால், கோபி அருகே குளம் நிரம்பியது. கோபி தாலுகா, பெருமுகை கிராமத்தில், சஞ்சீவிராயன் குளம் உள்ளது. 24 அடி கொள்ளளவு கொண்ட குளத்தின் மூலம், 220 ஏக்கர் பாசனம் பெறுகிறது. தவிர பல கிராமங்களுக்கு, நிலத்தடி நீராதாரமாக குளம் உள்ளது. கடந்த, 2021ல் நவ., மாதத்தில் பெய்த, வடகிழக்கு பருவமழையால் குளம் நிரம்பியது. அதன்பின் மழையின்றி, நீர்மட்டம் உயரவில்லை. குளத்தை சுற்றியுள்ள வனப்பகுதியில், நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்து, நேற்று காலை குளம் நிரம்பியது. பொதுப்பணித்துறையினர் கரும்பாறை பள்ளத்தில் இருந்து, சஞ்சீவிராயன் குளத்துக்கு மழைநீர் செல்லும் வழியில் உள்ள ஷட்டரை அடைத்தனர். இதனால் சஞ்சீவிராயன் குளத்துக்கு சென்ற, 50 கன அடி மழைநீர், பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டதாக, பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.