மேட்டுப்பாளையம்:பாலப்பட்டியில், மேல்நிலை தொட்டியின் மேல் பகுதி, இடிந்துவிழும் நிலையில் உள்ளது.மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையம் ஊராட்சி உள்ளது. இதன் 3 வது வார்டு உறுப்பினர் உஷாதேவி கூறியதாவது:பாலப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இதில் உப்புத் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த மேல்நிலைத் தொட்டியில் இருந்து பாலப்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், துர்கா அவன்யூ, அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. தொட்டி நல்ல நிலையில் உள்ளது. ஆனால் அதன் மேல் பகுதி பாதி இடிந்து நிலையிலும், பாதி இடிந்துவிழும் நிலையிலும் உள்ளது. மேல்நிலை தொட்டியின் மேல் பகுதியை சீரமைத்து கொடுக்கும்படி ஊராட்சியில் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை பெரிய ஆபத்து ஏற்படும் முன்பு ஊராட்சி நிர்வாகம் மேல்நிலை தொட்டியை சீரமைக்க வேண்டும். இவ்வாறு உஷா தேவி கூறினார்.