அன்னூர்:அன்னூரை உள்ளடக்கிய அவிநாசி தொகுதி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ளதால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.கோவை வருவாய் மாவட்டத்தில் அன்னூர் ஒன்றியம் உள்ளது. ஆனால் சட்டமன்ற தொகுதி, திருப்பூர் மாவட்டம், அவிநாசி தொகுதியில் உள்ளதால் அன்னூர் ஒன்றியத்திற்கு போதுமான வளர்ச்சி பணிகள் செய்யப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து அன்னூர் மக்கள் கூறியதாவது :கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜி, கோவை மாவட்டத்தில், கோவில்பாளையம், மேட்டுப்பாளையம், காரமடை, சூலூர் ஆகிய பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வளர்ச்சிப் பணிகளை முடுக்கி விடுகிறார். அன்னூர் ஒன்றியம் தி.மு.க.,வில் கட்சி அடிப்படையில் திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் உள்ளது. மேலும், சட்ட மன்ற தொகுதி அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது.எனவே கோவை மாவட்டம் முழுவதும் வலம் வரும் அமைச்சர் அன்னூர் வருவதில்லை. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அன்னூர் ஒன்றியத்திற்கு பொறுப்பு. ஆனால் இதுவரை இரண்டு முறை மட்டுமே அன்னூர் வந்துள்ளார்.ஜல் ஜீவன் திட்டத்தில் அன்னூர் ஒன்றியத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை. மின்மயானம் கட்டும் பணி மெத்தனமாக நடக்கிறது. அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படவில்லை. திட்டமிடப்பட்ட இரண்டு புறவழிச் சாலைகளும் முடங்கிக் கிடக்கின்றன. அமைச்சர் அன்னூருக்கு வந்தால் இந்த கோரிக்கைகள் குறித்து தெரிவித்து நடவடிக்கை எடுக்க இருக்கலாம். ஆனால் இரண்டு அமைச்சர்களும் அன்னூர் ஒன்றியத்தில் கவனம் செலுத்துவதில்லை.ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆகியும் இன்னும் முக்கியமான எந்த கோரிக்கையும் தமிழக அரசால் நிறைவேற்றப்படவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அன்னூர் மக்கள் தெரிவித்தனர்.