கோவை:பள்ளிகளுக்கு மீண்டும் தொடர் விடுமுறை அறிவித்துள்ளதால், இடைநிற்றலோடு குழந்தை தொழிலாளர் முறையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.கொரோனா தொற்று பரவலால், பள்ளிகள் மூடப்பட்டதால், இடைநிற்றல் அதிகரித்ததோடு, பலர் குழந்தை தொழிலாளர்களாக மாறி விட்டனர். இவர்களை பள்ளிக்கு வரவழைக்க ஆசிரியர்கள் படாதபாடு பட்டனர். குறிப்பாக, கோவை மாவட்டத்தில், பேரூர், எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டங்களில் இடைநிற்றல் அதிகரித்திருக்கிறது. அவர்களில், மாற்றுச்சான்றிதழ் பெற்று பள்ளியில் சேராத மாணவர்களின் விவரங்கள் திரட்டி, மீண்டும் முறைசார் பள்ளிகளில் சேர்க்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இப்பணிகள் முடிவதற்குள், மீண்டும் பள்ளிகளுக்கு இம்மாதம் இறுதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பல குழந்தைகள் மீண்டும் வேலைக்கு செல்லும் அபாயம் உள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில், எட்டாம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே, தினசரி வகுப்புகள் எடுக்கப்படும். இரண்டு மணி நேரம் மட்டுமே இவ்வகுப்பு நடப்பதால், வேலைக்கு செல்லும் குழந்தைகளை கண்டறிவது கடினம். எனவே, குழந்தை தொழிலாளர் முறையை தடுக்க, ஆய்வு பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், '18 வயது வரை உள்ளவர்கள் குழந்தைகளே. ஆனால், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலைக்குச் சென்றால் மட்டுமே, அக்குழந்தைகள் சட்டப்படி தொழிலாளர்களாக கருதப்பட்டு, பணிக்கு அமர்த்திய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறைந்த ஊதியம் வழங்குவதற்காக, பல நிறுவனங்கள், 15 வயதுக்கு மேற்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துகின்றன. இம்முரண்பாட்டை களைய வேண்டும். கோவை போன்ற பெருநகரங்களில், குழந்தை தொழிலாளர் முறையை கட்டுக்குள் கொண்டு வர தொடர் ஆய்வு அவசியம். பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்ட இச்சூழலில், ஆய்வு பணியை தீவிரப்படுத்தினால், குழந்தைகள் தொழிலாளர்களாக மாறுவது தவிர்க்கப்படும்' என்றனர்.