கோவை:'விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 18 வயதுக்கு முன் திருமணம் செய்துகொள்ள மாட்டோம்' என்கிற உறுதிமொழியை, மாணவர்களிடம், பள்ளி கல்வித்துறை பெறுகிறது.கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டதால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் குழந்தை திருமணம், இளம் வயதில் கருத்தரிப்பு அதிகரித்துள்ளது. பள்ளி கல்வித்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறை இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் கீதாவிடம் கேட்டபோது, ''கொரோனா இடைவெளிக்கு பின், ஒன்று முதல் பிளஸ் 2 வரை, 7,000 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரவில்லை என்பது கண்டறியப்பட்டது. அதில், 5,300 பேர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ''சொந்த ஊருக்கு சென்றுள்ளதால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பலர் வெளிமாவட்டங்களுக்கு சென்று விட்டனர். கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களை தொடர்பு கொண்டு வருகிறோம். திருமணம் செய்துகொண்ட மாணவர்கள் பட்டியல் எடுக்க உள்ளோம். விழிப்புணர்வு ஏற்படுத்த, 18 வயதுக்கு முன் திருமணம் செய்ய மாட்டோம் என மாணவர்களிடமும், திருமணம் செய்து வைக்க மாட்டோம் என பெற்றோரிடமும் உறுதிமொழி கையெழுத்து பெற்று வருகிறோம்,'' என்றார்.