பேரூர்:காளம்பாளையத்தில், துாக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கிய பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.காளம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவரது மனைவி மாலினி. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது மகள் பிரியதர்ஷினி திருமணமாகி, கணவருடன் வசித்து வருகிறார்.கடந்த, 9ம் தேதி, பிரியதர்ஷினி வழக்கம்போல் தனது அம்மாவுக்கு போன் செய்துள்ளார். பலமுறை தொடர்பு கொண்டும் மாலினி போனை எடுக்காததால், தந்தையிடம் தெரிவித்து, வீட்டுக்குச் சென்று பார்க்க கூறியுள்ளார்.ஹரிகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக மூடப்பட்டு இருந்தது. வெகுநேரமாக தட்டியும் திறக்காததால், அருகில் உள்ளவர்கள் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மாலினி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மாலினிக்கு உடல் நலக்குறைவு உள்ளதால், பல மாத்திரைகளும், துாக்க மாத்திரையும் எடுத்துக் கொள்வது வழக்கம். சம்பவத்தன்று, கூடுதலாக துாக்க மாத்திரை சாப்பிட்டதால் மயங்கி விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சூழலில், மாலினி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். பேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.