கோவை;'இல்லம் தேடி' கல்வித்திட்டத்தில், கோவை மாவட்டத்தில், 2,000 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால், ஆன்-லைன் வாயிலாக கற்றல், கற்பித்தல் பணி நடந்தது. இருப்பினும், மாணவர்கள் இடையே கற்றல் இடைவெளி அதிகளவில் ஏற்பட்டது.நன்றாக படிக்கும்மாணவர்கள் கூட சரளமாக வாசிக்கவும், எழுதவும் சிரமப்பட்டனர். சாதாரண பயிற்சி தேர்வுகளை முடிக்க பெரும்பாலான மாணவர்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்டதுடன், அதிகளவில் பிழையுடன் எழுதியிருந்தனர். இக்கற்றல் இடைவெளியை குறைக்கவே, 'இல்லம் தேடி' கல்வித்திட்டம் துவக்கப்பட்டது.தற்போது கொரோனா தொற்று மூன்றாவது அலை பரவ ஆரம்பித்திருப்பதால், பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த சில மாதங்களாக வழங்கப்பட்ட பயிற்சிகளும் பலனின்றி போய் விடுமோ என்ற அச்சம், தலைமை ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ''மாணவர்களுக்கு இதுவரை அளித்த பயிற்சிகள் பாதிக்காமல் இருக்க, அவரவர் பகுதிகளில் செயல்படுத்தியுள்ள, 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னார்வலர்கள் அளிக்கும் பயிற்சிக்கு மாணவர்களை பெற்றோர் அனுப்ப வேண்டும். கோவையில், 2000 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.