பரமக்குடி : பரமக்குடி 19வது வார்டில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதுடன், குறுகிய இடத்தில் ரேஷன் கடை செயல்படுவதால் மக்கள் குமுறலில் உள்ளனர்.இந்த வார்டில் அய்யாதுரை தெரு, எம்.எஸ். அக்ரஹாரம், எஸ்.எம். அக்ரஹாரம், பாவடித் தெரு, சங்கு தெரு, கதீஜா பீபி சந்து, கோவலன்தெரு, ஆஸ்பத்திரி ரோடு,அனுமார் கோயில் தெருக்கள் உள்ளது.
இப்பகுதியில் அனுமார் கோயில் உட்பட வழிபாட்டுத்தலங்கள் அதிக அளவில் உள்ளது.தொடர்ந்து அனைத்து தெருக்களிலும் ரோடு அமைக்கப்பட்டு வரும் நிலையில் வாறுகால் கட்டப்படாமல் உள்ளது.ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் ரோட்டில் தேங்கும் தண்ணீர் வீடுகளில் புகும் நிலை உள்ளது.தற்போது போலீஸ் ஸ்டேஷன் ரோடு தொடங்கி ரோடு அமைப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு கற்கள் பெயர்க்கப்பட்டது.
ஆனால் ரோடு பணி நடக்காமல் உள்ளது.19வது வார்டுக்கு உட்பட்ட ரேஷன் கடை 18வது வார்டு ரேஷன் கடை உடன் இணைந்து செயல்படுகிறது. இதனால் நெரிசலில் பொருட்கள் வாங்க வழியின்றி மக்கள் தவிக்கின்றனர்.அப்பகுதி மக்கள் கூறியதாவது:ஆர்.ஜானகிராமன், அய்யாதுரை தெரு: இந்த வார்டில்வசந்தபுரம் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வாக்காளர்களை, எம்.எஸ். அக்ரஹாரம் மற்றும் எஸ்.எம்.அக்ரஹாரம் பகுதிகளில் நகராட்சியில் சேர்த்துள்ளனர்.தொடர்ந்து இவர்களுக்கு முறையான முகவரி இல்லாத சூழலில் போலியான முகவரியில் வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
ரேஷன் கடை குறித்து குறைதீர் கூட்டத்தில் தெரிவித்த போது அதிகாரிகள் மாற்றுவதாக உறுதியளித்தனர். ஆனால் இன்று வரை ஒரே கடையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் பொருட்களை வாங்கும் சூழல் உள்ளது.கேசவன், எஸ்.எம்.அக்ரஹாரம்: தெருக்களில் குப்பைகளை நகராட்சியினர் முறையாக அள்ளாமல் உள்ளனர். பள்ளி அருகில் கொட்டி வைத்துள்ளதால் சுகாதாரமற்ற நிலை உள்ளது. மழைக்காலங்களில் ரோட்டில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. வாறுகால் அள்ளப்படாமல் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது.