ரெட்டியார்சத்திரம் : வேலம்பட்டி - -கொட்டாரபட்டி ரோடு குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தபுள்ளி வேலம்பட்டி பகுதியில் ஏராளமான விவசாயிகள் பூ, காய்கனி சாகுபடி மேற்கொண்டுள்ளனர். எம்.அம்மாபட்டி, மேலப்பட்டி, பங்காருபுரம், மெய்ஞானபுரம், மாங்கரை, டி.புதுப்பட்டி விவசாயிகளும், விளை பொருட்களை திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு மேற்கண்ட ரோடு வழியாகவே கொண்டு செல்கின்றனர்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சீரமைத்த இந்த ரோடு பராமரிப்பு இல்லாததால் பெயர்ந்து கிடக்கிறது. ஊராட்சி ஒன்றிய பராமரிப்பில் உள்ள இந்த ரோட்டில் குறைந்தபட்ச பணிகளைக் கூட மேற்கொள்ளவில்லை.
இதனால் பெரும்பகுதி அரிக்கப்பட்டு ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளன. கொட்டாரபட்டி விலக்கு முதல் பெருமாள் கோயில் வரை 5 கி.மீ., துார சாலையில் ஆழமான குழிகள் உள்ளன. இருசக்கர வாகனங்கள் செல்லும்போது ரோட்டோர பள்ளங்களில் கவிழ்கின்றன. எனவே ரோட்டை உடனே சரிசெய்ய வேண்டும்.