விழுப்புரம்-விழுப்புரம் அருகே கார் மீது பஸ் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.தஞ்சாவூரைச் சேர்ந்தவர் மார்ட்டின் மகள் கேத்ரின், 21; இவர், புதுச்சேரி மாநிலம், அரியூரில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது அண்ணன் ஜோகன், 23; இவர், தங்கையை நேற்று இரவு 'ஹூண்டாய் ஐ10' காரில் தஞ்சாவூர் அழைத்துச் சென்றார். காரை அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டன், 43; ஓட்டினார்.விழுப்புரம் அடுத்த கோலியனுார் அருகே 7:30 மணியளவில் வந்தபோது, புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அதிவேகமாக வந்த 'பிராகரஸ் டிரான்ஸ்போர்ட்' தனியார் பஸ், கார் மீது மோதியது.இதில், பஸ்சின் கீழ்பகுதியில் கார் சிக்கியது. உடன் அப்பகுதி மக்கள், விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் ஜோகன், கேத்ரின் ஆகியோரை மீட்டனர்.இடிபாடுகளில் சிக்கிய மணிகண்டனை மீட்க, தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டும் முடியவில்லை.விபத்து நடந்த இடத்திற்கு வந்த கலெக்டர் மோகன், எஸ்.பி., ஸ்ரீநாதா ஆகியோர் பார்வையிட்டு மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.பின், பஸ் ஒருபுறம் சாய்க்கப்பட்டு, காரை கயிறு கட்டி பொக்லைன் மூலம் இழுத்து, காரின் முன்பக்கத்தை உடைத்து மணிகண்டனை ஒரு மணிநேரம் போராடி மீட்டனர். மூவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்தால் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் 8:45 மணி வரை போக்குவரத்து பாதித்தது.