சிதம்பரம்-துணைவேந்தர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், சிதம்பரத்தில் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் தொடர்ந்தது.கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., மருத்துவக்கல்லுாரி பயிற்சி டாக்டர்களுக்கு எட்டு மாதங்களாக அரசு நிர்ணயித்துள்ள ஊக்கத் தொகை மற்றும் உதவித் தொகை வழங்கவில்லை என கூறி கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பதிவாளர் சீதாராமன், மருத்துவக் கல்லுாரி முதல்வர் ரமேஷ், கண்காணிப்பாளர் லாவண்யா குமாரி, சிதம்பரம் ஆர்.டி.ஓ., ரவி ஆகியோர் பங்கேற்றனர்.பேச்சுவார்த்தையில், பயிற்சி மாணவர்களுக்கு சேரவேண்டிய உரிய ஊக்கத் தொகை மற்றும் உதவித் தொகையை வழங்க உரிய பரிந்துரை கடிதம் மருத்துவ கல்லுாரி இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவத் துறை உயரதிகாரிகளிடம் பேசி தீர்வு காண்பதாக கூறியும் மாணவர்கள் ஏற்காததால் எந்த முடிவும் எடுக்கவில்லை.அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லுாரியை கடந்த ஆண்டு தனது கட்டுப்பாட்டிற்கு தமிழக அரசு கொண்டு வந்தது. மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையை நிர்வாகம் செய்ய ஆண்டுக்கு ரூ. 200 கோடிக்கு மேல் செலவாகும். இந்தத் தொகையை அரசு ஒதுக்கீடு செய்வதில் நிதி பிரச்னைகள் உள்ளது.பயிற்சி டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பல்கலைக்கழக மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.