செஞ்சி-செஞ்சி கூட்ரோட்டில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடுவதில் அ.தி.மு.க.,வின் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கூட்ரோட்டில் நகர அ.தி.மு.க., சார்பில் நேற்று எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா நடந்தது. நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழா நடந்த இடத்தில் இருந்து 300 அடி துாரத்தில் திண்டிவனம் சாலையில் மருத்துவ அணி மாவட்ட இணை செயலாளர் டாக்டர் யோகேஸ்வரன் தலைமையில் தனியாக அன்னதானம், இனிப்பு, வேட்டி சேலை வழங்க ஏற்பாடு செய்திருந்தனர்.விழா துவங்கிய போது அங்கு வந்த நகர செயலாளர் வெங்கடேசன் மற்றும் அ.தி.மு.க.,வினர் நகர பகுதியில் பிற அணி சார்பில் நிகழ்ச்சி நடத்தக் கூடாது. அதுமட்டுமின்றி மாவட்ட செயலாளர் சண்முகத்தின் படம் வைக்கவில்லை. அதனால், நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என தடுத்தனர். இதனால், இரு தரப்பினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.மாவட்ட மருத்துவ அணி இணைச் செயலாளர் தரப்பினரை விழுப்புரம் சாலையில் விழா நடத்தும்படி கேட்டு கொண்டனர்.இதையடுத்து விழுப்புரம் சாலையில் மருத்துவ அணி சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.