கண்டமங்கலம்-கண்டமங்கலம் அருகே பெண்ணிடம் தாலிச் செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி வில்லியனுார், கணுவாய்பேட்டை, புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன், 38; பெயிண்டர். இவரது மனைவி பிரேமா 34; இருவரும் கடந்த 15ம் தேதி செஞ்சியில் குலதெய்வ கோவிலுக்குச் சென்று தனித்தனி மொபட்டுகளில் வீடு திரும்பினர்.மாலை 4:00 மணியளவில் பக்கிரிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே கருணாகரன் முன் செல்ல பிரேமா அவரை பின் தொடர்ந்து சென்றார்.அப்போது பைக்கில் பின் தொடர்ந்த நபர், பிரேமா அணிந்திருந்த 6 சவரன் தாலிச் செயினை இழுத்தார். இதனால், நிலை தடுமாறி கீழே விழுந்த பிரேமா செயினை கெட்டியாக பிடித்துள்ளார். இருப்பினும் அந்த நபர், பாதி செயினை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றார்.கருணாகரன் கொடுத்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.