கண்டாச்சிபுரம்-கண்டாச்சிபுரத்தில் இரு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 26 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் மாலை, ஓட்டேரி மற்றும் மடவிளாகம் பகுதியைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு பிரிவினரும் அந்தந்த பகுதிகளில் கல்வீசி தாக்கிக் கொண்டனர். இதனால், அப்பகுதிகளில் பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.இந்நிலையில், ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் அகத்தியன், 25, அளித்த புகாரின் பேரில் மடவிளாகம் பகுதியைச் சேர்ந்த 14 பேர் மீதும்; மடவிளாகம் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கரின் மகன் பாஸ்கர், 23, அளித்த புகாரின் பேரில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த 12 பேர் மீதும் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.மேலும், இருதரப்பையும் சேர்ந்த பாரத், 19; மணிகண்டன், 28; சாமிநாதன், 20; மதியழகன், 27; விஜி, கர்ணன், 44; செல்வம், 48; ஆகிய 7 பேரை கைது செய்தனர்.தொடர்ந்து 2ம் நாளாக கண்டாச்சிபுரம் பகுதியில் பதற்றம் நிலவுவதால் விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜூ, டவுன் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையிலான போலீசார் 2ம் நாளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.