நெய்வேலி-என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு வீடு, நிலங்களை வழங்கியவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான புதிய திட்ட கொள்கைகளை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி காணொலி வாயிலாக வெளியிட்டார்.கடலுார் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 10ல் உள்ள லிக்னைட் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு என்.எல்.சி.,சேர்மன் ராகேஷ்குமார் தலைமை தாங்கினார். என்.எல்.சி., இயக்குனர்கள் ஷாஜி ஜான், ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன், என்.எல்.சி., ஒற்றாடல் துறையின் முதன்மை கண்காணிப்பு அதிகாரி சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். மனிதவளத் துறை இயக்குநர் விக்ரமன் வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் சபா ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், கலெக்டர் பாலசுப்ரமணியம், எஸ்.பி.,சக்தி கணேசன் பங்கேற்றனர். தமிழக அமைச்சர்கள் பன்னீர்செல்வம் மற்றும் கணேசன் பங்கேற்று நில ஆர்ஜிதம் செய்ய வேண்டிய அவசியம் மற்றும் விவசாயிகளின் நலன்கள் குறித்து பேசினர்.புதிய திட்ட கொள்கைகளை கானொலி வாயிலாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டு பேசுகையில், என்.எல்.சி.,நிறுவனத்திற்கு வீடு, நிலங்களை கொடுத்தவர்களுக்காக புதிய மறுவாழ்வுக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் நிலக்கரித் துறை அமைச்சகத்தின் என்.எல்.சி., இந்தியா நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது.பாதித்த மக்களுக்கு பல வாய்ப்புக்களை அளிக்கும் இலகுவான மறுவாழ்வுக் கொள்கையை உருவாக்கிய என்.எல்.சி., இந்தியா நிறுவனம் மற்றும் தமிழக அரசின் முயற்சிகள் பாராட்டுக்குரியது. பாதித்த கிராம மக்களுக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் இழப்பீட்டை புதிய மறுவாழ்வுக்கொள்கை உறுதி செய்துள்ளது. திறன் இந்தியா திட்டத்தில் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க தமிழக அரசுடன் என்.எல்.சி., நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. நிலையான வாழ்வாதாரத்திற்கும், ஒவ்வொரு கிராமத்தையும் தற்சார்புடையதாக மாற்ற புதிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுக் கொள்கை வழிவகுக்கும். கிராம மக்களுக்கு பயனளிப்பதோடு, என்.எல்.சி., நிறுவனத்தின் உற்பத்தியை அதிகரிக்கும், என்றார்.வி.சி.,கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., நிலக்கரித்துறை செயலர் அனில்குமார் ஜெயின், கூடுதல் செயலர் நாகராஜூ ஆகியோர் கானொலியில் உடனிருந்தனர்.பா.ம.க.,ஏற்க மறுப்புஇந்த புதிய கொள்கையில் குறிப்பிட்டுள்ள இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அப்படியில்லாதபட்சத்தில் புதிய கொள்கையை ஏற்க மாட்டோம் என்று கூறி பா.ம.க.,வினர் கோஷமிட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.