புதுச்சேரி-கடலுார் சாலையில் நெரிசலை தவிர்க்க...'கதி சக்தி' மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஒருங்கிணைப்பில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இணைந்து, தென் மண்டல கதி சக்தி மாநாடு நேற்று காணொலி வாயிலாக நடந்தது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்கரி தலைமை தாங்கினார்.கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், அரசு செயலர் அருண் ஆகியோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.மாநாட்டில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரையிலான சாலை சந்திப்புகளை மேம்படுத்த, 'மேம்படுத்தப்பட்ட சாலை மேம்பாலம் திட்டத்தில்' ரூ.450 கோடி அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மேம்பாலத் திட்டம், நகரில் அன்றாடம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கும்.விமான நிலைய விரிவாக்கம்புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. விமான நிலையத்தில் தற்போது 1,502 மீட்டர் துார ஓடுபாதை உள்ளது. இதனை விரிவுபடுத்த கூடுதலாக 1,828 மீட்டர் நீளம் ஓடுபாதை தேவைப்படுகிறது.விமான நிலைய உள்கட்டமைப்பை விரிவாக்கம் செய்வதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவுபடுத்த மத்திய அரசின் உதவி, புதுச்சேரிக்கு அவசர தேவையாக உள்ளது.ஹெலிகாப்டர் சேவைபுதுச்சேரியில் உள்ள புனித யாத்திரை நகரமான காரைக்காலில் உள்ள சனீஸ்வரரை வழிபட இந்தியாவில் இருந்து மட்டுமன்றி, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.ஆனால், காரைக்காலில் விமான நிலைய வசதி இல்லை. காரைக்காலுக்கு ஹெலிபேடு, விமான நிலைய கட்டமைப்பு ஏற்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது.நீண்ட நாள் கோரிக்கையான காரைக்கால்- புதுச்சேரி இடையேயான பயணிகள் படகு சேவையை, மத்திய அரசின் நிதியுதவியுடன் நிறைவேற்றிட வேண்டும்.புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.பறக்கும் பாலம்புதுச்சேரி-கடலுார் இடையே போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க, புதுச்சேரி மரப்பாலம் முதல் மாநில எல்லையான முள்ளோடை வரை 'மேம்படுத்தப்பட்ட சாலை மேம்பாலம்' (பறக்கும் பாலம்) அமைப்பது அவசர தேவையாக உள்ளது. இதனை, மத்திய அரசின் உதவியால் மட்டுமே செயல்படுத்த முடியும்.புதுச்சேரி மற்றும் தமிழக மாவட்டங்களுக்கு இடையேயான ரயில் இணைப்பு போதுமானதாக இல்லை. தரங்கம்பாடி, சீர்காழி வழியாக காரைக்கால் மற்றும் கடலுாரை இணைக்கும் ரயில் பாதை விரிவாக்கம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் இடையே இணைப்பை எளிதாக்கும்.மாகி பிராந்தியத்தில் ரயில்வே அமைப்பை மேம்படுத்த வேண்டும்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து ரயில் சேவையை ஏனாம் பிராந்தியம் வரை நீட்டிக்க வேண்டும்.சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரி மார்க்கத்தில் தற்போது சாலை போக்குவரத்து மட்டுமே உள்ளது.தொழில் துறை முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழித்தடத்தில் ரயில் இணைப்பை உருவாக்குவது, புதுச்சேரியின் தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இதனை முன்னுரிமை அடிப்படையில் அமைச்சர் பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.