போடி : போடி அருகே மணியம்பட்டி ஊராட்சியில் குடிநீர், சாக்கடை, ரோடு, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி ஒன்றியம், மணியம்பட்டி ஊராட்சியில் இந்திரா காலனி, நடுத்தெரு, தெற்கு தெரு , ஊராட்சி அலுவலகம் ரோடு உள்ளிட்ட பகுதிகள் அடங்கியுள்ளன. இப்பகுதிக்கு உப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. குடிநீர் வினியோக குளறுபடியால் 4 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.
குடிநீர் சப்ளை இல்லாத நாட்களில் உவர்ப்பு நீரைய மக்கள் குடிநீராக பயன்படுத்துகின்றனர். ரோடு அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேலானதால் தெருக்கள் குண்டும், குழியுமாக உள்ளன.ஊராட்சி அலுவலம் அருகே உள்ள குடிநீர் மேல் நிலைத்தொட்டி பகுதியில் உள்ள குழாய் சேதமடைந்து ஒரு மாதமாகியும் சீரமைக்காததால் குடிநீர் வீணாக சாக்கடையில் செல்கிறது. இந்திரா காலனியில் தரமற்ற முறையில் தரைப்பாலம் அமைத்தால் விபத்து ஏற்படும் வகையில் கம்பி வெளியே நீட்டியுள்ளது.
ஊராட்சி தலைவர் கிராமத்தின் அடிப்படை வசதி குறித்து கண்டு கொள்ளாததால் மக்கள் சிரமம் அதிகரித்துள்ளாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.ரோடு வசதி தேவை பி.மூக்கன், விவசாயி, மணியம்பட்டி: இந்திரா காலனி ரோடு அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேலானதால் ரோடு முழுவதும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. மின்கம்பம் இருந்தும் பல இடங்களில் தெருவிளக்குகள் எரியாததால் கிராமம் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் இரவில் பெண்கள் வெளியே செல்ல அச்சம் அடைந்துள்ளனர்.
சுகாதார வளமும் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் பயன்பாடின்றி உள்ளது. ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கழிவுநீரால் சுகாதார கேடுஎஸ்.பிச்சைமணி. மணியம்பட்டி: நடுத்தெருவில் குடிநீர் பைப் லைன் அமைப்பதற்காக ரோடு தோண்டப்பட்டு பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாத மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் பெரும் பள்ளங்களாக மாறியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் பள்ளங்களில் தேங்கி மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
ரோடு வசதி செய்து தர ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.ரூ.8.5 லட்சத்தில் ரோடு வசதிஜி.பாண்டியம்மாள், ஊராட்சி தலைவர், மணியம்பட்டி: தெருக்களில் அடிப்படை வசதிகள் செய்திட போதிய நிதி இல்லை. நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. பல ஆண்டுகளாக ஊராட்சி செயலர் பணியிடம் காலியாக உள்ளதால் அலுவலகப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. துப்புரவு பணியாளர் இல்லாததால் சுகாதார பணிகள் முடங்கியுள்ளது. இங்கு நிரந்தரமாக ஊராட்சி செயலாளர், துப்புரவு பணியாளரை நியமிக்க வேண்டும். சமுதாயக்கூடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தும் மக்கள் பயன் படுத்தும் வகையில் ஊருக்குள் கட்டாமல் அரசியல் நோக்கத்தோடு தொலை தூரத்ததில் கட்டி வருகின்றனர். இதனால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். 15வது நிதிக்குழு திட்டத்தின் ரூ.8.5 லட்சம் செலவில் ரோடு, குழாய் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளன. விரைவில் பணி துவங்கப்படும். அடிப்படை வசதிகள் மேற்கொள்ள எம்.எல்.ஏ, எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.