வடமதுரை : 'நெல் தரிசில் பயறு வகைகளை பயிரிட்டால் அதிக லாபம் கிடைக்கும்' என, வேளாண் அலுவலர் சுப்பையா தெரிவித்தார்.அவர் கூறியது: நெல் அறுவடைக்கு பிறகு பயறு வகைகளான உளுந்து, துவரை, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, மொச்சை ஆகியவற்றின் சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை பயறுவகை சாகுபடி செய்தால் மண்ணின் வளம் மேம்படும். மனிதனின் புரத தேவைக்கு உற்பத்தி, மண் வளம் உயர்வு, குறைந்த நாளில் குறைந்த நீரில் அதிக வருவாய் போன்றவை பயறுவகை பயிர்களின் முக்கியத்துவம்.சம்பா நெல் அறுவடைக்குப் பின் நெல் வயல்களில் இருக்கும் ஈரப்பதத்தை பயன்படுத்தியும், பாசன வசதி உள்ள இடங்களில் இறைவை பயிராகவும் பயறுவகை பயிர்களை ஊடுபயிராகவோ, கலப்பு அல்லது வரப்பு பயிராகவோ சாகுபடி செய்யலாம். பூக்கும் பருவத்தில் 2 சதவீதம் டி.ஏ.பி., கரைசல் இலைவழி ஊட்டமாக அல்லது பயறு ஒண்டர் நுண்ணுாட்ட உரம் ஏக்கருக்கு 2 கிலோ அளிப்பதன் மூலம் பயிரின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். பூக்கள் உதிர்வது தடுக்கப்பட்டு அதிக காய்கள் பிடிக்கவும், காய்களின் எடை, மகசூல் அதிகரிக்கவும் செய்யும், என்றார்.