புதுச்சேரி-புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் 57 சதவீதமாக அதிகரித்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 1,579 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 907 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,38,617 ஆக உயர்ந்துள்ளது. தொற்று சதவீதம் 57.44 சதவீதமாக அதிரித்துள்ளது.தொற்று பாதிப்பால் மருத்துவமனைகளில் 130 பேர், வீட்டு தனிமையில் 8229 பேர் என மொத்தம் 8,359 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று முன்தினம் 147 பேர் குணமடைந்தனர் இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,28,168 ஆக உயர்ந்தது.நேற்று முன்தினம் புதுச்சேரியில் 85 வயது முதியவர், 65 வயது மூதாட்டி, காரைக்காலில் 67 வயது முதியவர் தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பலனின்றி இறந்தனர். கொரோனா இறப்பு எண்ணிக்கை 1890 ஆக அதிகரித்தது.நேற்று முன்தினம் முதல் டோஸ் தடுப்பூசி 227 பேர், இரண்டாவது டோஸ் 308 பேர், பூஸ்டர் டோஸ் 72 பேர் என மொத்தம் 607 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.மாநிலத்தில் இதுவரை 9,06,666 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.