சங்கராபுரம்-சங்கராபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர், அனுமதியின்றி மாரத்தான் போட்டி நடத்திய 30 பேர் என 70 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.சங்கராபுரம் அடுத்த ச.செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டாபி மகன் ரமேஷ். இவர், அப்பகுதியில் உள்ள பால் பூத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பால் ஸ்டோருக்கு பால் கேன் ஏற்ற மினி லாரி வந்தது. அப்போது போக்குவரத்திற்கு இடையூறாக அதே ஊரைச் சேர்ந்த சிலர் சாலையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை ஒதுங்கி நிற்கும்படி ரமேஷ் கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த அதே ஊரைச் சேர்ந்த சிரஞ்சீவி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ரமேசைஷயும், விலக்க வந்த அவரது அண்ணி சூர்யாவையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதனை கண்டித்து, ரமேஷ் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் செல்லம்பட்டு பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். சங்கராபுரம் போலீசார் மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 40 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.அனுமதியின்றி மாரத்தான்கொசப்பாடி கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, போதை ஒழிப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அனுமதியின்றி போட்டி நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை உட்பட 30 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.