விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின்போது, விதி மீறியோர் மீது 703 வழக்குகள் பதியப்பட்டு, 1 லட்சத்து 65 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையொட்டி, அரசு இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்று கிழமைகளில் முழு நேர ஊரடங்கையும் அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு விதிமுறை பெயருக்கு மட்டுமல்லாமல், மக்களின் பாதுகாப்பு கருதி தேவையின்றி வெளியே வருவோர் மீது காவல் துறை மூலம் வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 6ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு 10:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை அமலுக்கு வந்தது. முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடந்த 9ம் தேதி மாவட்டத்தில் 64 இடங்களில் 1,400 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இதன் மூலம் தேவையின்றி வெளியே சுற்றிய, முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளி ஆகிய ஊரடங்கு விதிமுறைகள் மீறியதாக 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.தொடர்ந்து, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 2ம் கட்ட முழு நேர ஊரடங்கு மாவட்டத்தில் கடைபிடிக்கப்பட்டது.இதையொட்டி, மாவட்டத்தில் 63 இடங்களில் 1,300க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதில், விழுப்புரம் நான்கு முனை சிக்னல் உட்பட முக்கிய இடங்களில் எஸ்.பி., ஸ்ரீநாதா நேரடியாக சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். இதையொட்டி, முழு நேர ஊரடங்கு விதிமுறை மீறியதாக மொத்தம் 703 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதில், விழுப்புரம் உட்கோட்டத்தில் 305 வழக்குகளும், திண்டிவனம் 170, செஞ்சி 127, கோட்டக்குப்பம் 101 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதில், முகக் கவசம் அணியாமல் சென்றதாக 519 வழக்குகளும், தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வந்ததாக 128 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது 56 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தலா 500 ரூபாய் வீதம் மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் கடந்த வாரம் ஞாயிற்றுகிழமையை விட, இந்தவார முழு நேர ஊரடங்கில் விதிமுறைமீறியதான வழக்குகள் குறைந்துள்ளது.
நோய் தொற்றை கட்டுப்படுத்தி முழுவதுமாக நீங்குவதற்காகத்தான் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.அந்த நேரங்களில் மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் வாகனங்களில் வந்தால் வழக்குகள் பதிவதோடு, அபராதம் வசூலிக்கப்படும் என எஸ்.பி., ஸ்ரீநாதா எச்சரித்துள்ளார்.