கடலுார்-கடலுார் மாவட்டத்தில், முகக்கவசம் அணியாத 14 ஆயிரத்து 529 நபர்கள் மீது வழக்கு பதிந்து, ரூ. 29.19 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கடலுார் மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.2021 டிசம்பரில் நாள் ஒன்றுக்கு ஒற்றை இலக்க எண்ணில் தொற்று உறுதியாகியது. டிச., 31ம் தேதி மாவட்டத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கண்டறியப்பட்டது.ஆனால் மறு தினம் முதலே பாதிப்பு அதிகரிக்க துவங்கியது. கடந்த ஜன., 1ம் தேதி 5 நபருக்கு கண்டறியப்பட்டது. 2ம் தேதி 9 பேர் என, உயர்ந்து, கடந்த 15 ம் தேதி 356, 16 ம் தேதி 305 என, பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது.
நேற்று முன்தினம் வரை , மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 1369 மற்றும் வெளி மாவட்ட மருத்துவமனைகளில் 308 பேர் உட்பட 1676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஆனாலும், மக்கள் சமூக இடைவெளியின்றி பொது இடங்களில் கூடுவது, முகக்கவசம் அணியாதது, நிகழ்ச்சிகளில் அதிகமானோர் கூடுவது உள்ளிட்ட காரணங்களால் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதனால் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் 7 உட்கோட்டங்களுக்குட்பட்ட டி.எஸ்.பி.,கள் மேற்பார்வையில் நோய் தடுப்பு நடவடிக்ககைளை தீவிரப்படுத்த எஸ்.பி., சக்திகணேசன் உத்தரவிட்டார். முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றுவோரிடம் அபராதம் விதிப்பு மற்றும் வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.கடந்த 16ம் தேதி ஊரடங்கின் போது முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றித் திரிந்த 742 பேர் மீது வழக்கு பதிந்து, ரூ. 1 லட்சத்து 60 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது.
கடந்த 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை முகக்கவசம் அணியாத, மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 14 ஆயிரத்து 529 நபர்கள் மீது வழக்கு பதிந்து ரூ. 29 லட்சத்து 19 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் பறிமுதல்நேற்று முழு ஊரடங்கு அன்று, மாவட்டம் முழுவதும் 54 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து 1500க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றித் திரிந்த 81 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.