சேத்தியாத்தோப்பு-சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவியில் 7 கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்த ஊராட்சித் தலைவர்களுடன் என்.எல்.சி., நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி பஸ் நிறுத்தம் அருகில் கத்தாழை, கரிவெட்டி, மும்முடி சோழகன், கீழ்வளையமாதேவி, சாத்தப்பாடி உள்ளிட்ட கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10.00 மணியளவில் திரண்டு என்.எல்.சி., நிறுவனத்தை முற்றுகை போராட்டம் நடத்த புறப்பட தயாராகினர்.அவர்களை சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., சுந்தரம், இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயாராஜ், சப்இன்ஸ்பெக்டர் பரணிதரன் ஆகியோர் தடுத்து நிறுத்தினர்.பின்னர், என்.எல்.சி., நிறுவனம் சார்பில் நிலங்கள், குடியிருப்புகள், மனைகளை கையகப்படுத்த ஊராட்சித் தலைவர்களை அழைத்து பேசக் கூடாது. விவசாயிகள், கிராம மக்களை அழைத்து பேச வேண்டும். கையகப்படுத்தும் நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். நிலங்கள், வீடுகளை தருவோருக்கு வாழ்வாதாரத் தொகை ரூ. 15 லட்சம் வழங்க வேண்டும். ஒவ்வொரு குடியிருப்புகளுக்கு மாற்றாக 10 சென்ட் வீட்டு மனை மற்றும் வீடுகள் கட்டித்தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததின் பேரில் 11.00 மணியளவில் கலைந்து சென்றனர்.