தி.நகர்-தி.நகர் பிரதான சாலையில், மீண்டும் அடுத்த பள்ளம் விழும் அளவிற்கு சாலை உள்வாங்கியுள்ளது.சென்னை பேருந்து வழித்தடங்களில், அடுத்தடுத்து பெரிய அளவில் திடீர் பள்ளங்கள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.இதில், கோடம்பாக்கம் மண்டலத்தில் அசோக் நகர், மேற்கு மாம்பலம் மற்றும் தி.நகர் ஆகிய பகுதிகளை இணைக்கும், முக்கிய சாலையாக பிருந்தாவன் தெரு உள்ளது.இச்சாலையில், சமீபத்தில் அடுத்தடுத்து மூன்று பள்ளங்கள் விழுந்தன. இவற்றை சீர் செய்யும் பணியில் குடிநீர் வாரியம் ஈடுபட்டு வருகிறது. மேலும், தம்பையா தெருவில் சாலை உள்வாங்கி பள்ளம் விழும் நிலையில் உள்ளது.இதேபோல், தி.நகரில் உள்ள முக்கிய பிரதான சாலைகளில் ஒன்றான டாக்டர் நாயர் சாலை 2014ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 15 அடி அகல நீளத்திற்கு பெரிய பள்ளம் ஏற்பட்டது.அதன் பின், 2019 ஜூலை மாதத்தில், 4 அடி விட்டம், 8 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இப்பள்ளங்களை குடிநீர் வாரியம் சார்பில் சீர் செய்யப்பட்டன.தற்போது, டாக்டர் நாயர் சாலையில் மீண்டும் மண் சரிந்து அடுத்த பள்ளம் விழும் அளவிற்கு சாலை உள்வாங்கியுள்ளது. இந்த இடத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, உள்வாங்கிய பகுதியில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.சென்னையில் பிரதான சாலைகளில் அடிக்கடி ஏற்படும் திடீர் பள்ளத்தால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர்.