சென்னை---சென்னை பெருநகரில், ஏழு உள்ளாட்சி அமைப்புகளில் கட்டட அனுமதி கோப்புகளை சரி பார்க்க, திட்ட உதவியாளரை அனுப்புவதில் சி.எம்.டி.ஏ., குளறுபடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.சென்னை பெருநகரில், மாநகராட்சி, நகராட்சிகளில், 10 ஆயிரம் சதுர அடி வரையிலான திட்ட அனுமதி பணிகளை அவர்களே பார்த்துக் கொள்கின்றனர். இதில், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு, இதற்கான அனுமதியை சி.எம்.டி.ஏ., வழங்காமல் உள்ளது.ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகளில் கட்டட அனுமதிக்காக வரும் கோப்புகளை சரிபார்க்க, சி.எம்.டி.ஏ.,வில் இருந்து திட்ட உதவியாளர்கள் அனுப்பப்படுவது வழக்கம். சில சமயங்களில் ஒரே திட்ட உதவியாளர், இரண்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கான கோப்புகளை பார்ப்பது வழக்கம். இந்நிலையில், மிக வேகமாக வளர்ந்து வரும் ஏழு உள்ளாட்சி அமைப்புகளில், ஒரே அலுவலரை கோப்புகளை ஆராய சி.எம்.டி.ஏ., அனுப்பிஉள்ளதாக கூறப்படுகிறது. சி.எம்.டி.ஏ.,வின் இந்த குளறுபடியால் உள்ளாட்சி அமைப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.இது குறித்து, உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:வில்லிவாக்கம், திருவள்ளூர், புழல், சோழவரம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியங்கள், புழல், மீஞ்சூர் பேரூராட்சிகளில் கோப்புகளை சரி பார்க்க, ஒரு உதவி திட்ட அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே நபர் ஏழு உள்ளாட்சி அமைப்புகளின் கோப்புகளை பார்ப்பதால் பணிகள் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, ஏழு உதவி திட்ட அதிகாரிகள் தலைமையில் சிறப்புக்குழுக்கள் அமைத்து, நிலுவையில் இருந்த 1,700 கோப்புகள் முடிக்கப்பட்டன. இதிலும் பெரும்பாலான கோப்புகளுக்கு இறுதி ஒப்புதல் தருவதில் குழப்பம் நிலவுகிறது.இதற்கு மாறான வகையில், ஒரே அலுவலரை ஏழு உள்ளாட்சிகளுக்கு அனுப்பியுள்ளது குளறுபடிக்கு வழிவகுப்பதாக உள்ளது. எதார்த்த நடைமுறைக்கு முற்றிலும் பொருந்தாத வகையில் சி.எம்.டி.ஏ.,வின் இந்த செயல்பாடு அமைந்துள்ளது.இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலரிடம் நேரிலேயே சில உள்ளாட்சி அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். போதிய எண்ணிக்கையில் அலுவலர்கள் இல்லை என்றால், கட்டட அனுமதி வழங்கும் பொறுப்பை எங்களிடமே ஒப்படைத்துவிடுங்கள். இது குறித்து துறை செயலர், தலைமை செயலர் ஆகியோரிடம் புகார் அளிக்க தயாராகி வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.