தி.நகர்-சென்னையில் நேற்று பெய்த ஒரு நாள் மழையில், தி.நகர் பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கி குளமாக மாறியதால், பயணியர் அவதிப்பட்டனர்.சென்னை மாநகரின் வர்த்தக மையமாக தி.நகர் உள்ளது. இங்கு, ஏராளமான தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.இதனால், தி.நகர் பஸ் நிலையத்தில் இருந்து, சென்னையின் பல பகுதிகளுக்கு பஸ் சேவை அதிகம் இருக்கும். இந்த பேருந்து நிலையம், சாலை மட்டத்தில் இருந்து தாழ்வாக உள்ளதால், மழைக் காலங்களில், பஸ் நிறுத்தம் முழுதும் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகிவிட்டது.இந்நிலையில், நேற்று பெய்த ஒருநாள் மழையில், பஸ் நிலையம் முழுதும் தண்ணீர் தேங்கி, குளம் போல் காட்சியளித்தது. இதனால் பயணியர் மிகவும் அவதிப்பட்டனர்.இதேபோல், வடபழநி பஸ் நிலையத்திலும் மழை நீர் தேங்கியது. இதனால், தாழ்வாக உள்ள பஸ் நிலையங்களை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.