சென்னை--ஆசனவாயில் மறைத்து கடத்தி வரப்பட்ட 37.88 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 852 கிராம் தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கொழும்புவிலிருந்து, சென்னை வரும் பயணியர் மூவர் தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், சந்தகேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில், விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற மூவரை, அதிகாரிகள் இடைமறித்து, சோதனை செய்தனர்.அப்போது, தங்க பசை உடைய மூன்று பொட்டலங்கள், அவர்கள் ஆசன வாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை வெளியே எடுத்து மதிப்பிட்டதில், 37.88 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 852 கிராம் தங்கம் இருந்தது தெரிய வந்தது.அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணி ஒருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.