தாம்பரம்--தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் நேற்று திறக்கப்பட்டது.தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனையில், 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த சிகிச்சை மையத்தில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை அளிக்கப்படும்.மேலும், மனநல ஆலோசனை, யோகா பயிற்சிகள் வழங்கப்படும். இதை தவிர, கபசுர குடிநீர், அமுக்கரா சூரண மாத்திரை, பிரம்மானந்த பைரவ மாத்திரை போன்றவை வழங்கப்படுவதுடன், மூச்சு பயிற்சி, வேது பிடித்தல், மூலிகை துாப மருத்துவம் போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்படும்.இதை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், செயலர் ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ், சித்த மருத்துவ நிறுவன இயக்குனர் மீனாகுமாரி மற்றும் பலர் பங்கேற்றனர்.