கீழ்ப்பாக்கம்-கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த மருத்துவமனை ஊழியர், ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சந்தீப் மோகன், 29. இவர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கிளினிக் சென்டரில், உதவி மேலாளராக பணிபுரிந்தார். இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை சந்தீப் மோகனை மருத்துவர்கள் பரிசோதிக்க வந்த போது, படுக்கையிலேயே இறந்து கிடந்துள்ளார். மேலும், அவரது கையில், பயன்படுத்தப்பட்ட நிலையில் ஊசி ஒன்றும், கையில் ஊசி செலுத்திக் கொண்டதற்கான தடயமும் இருந்துள்ளது.தகவலறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் செலுத்திக் கொண்ட ஊசி குறித்தும், தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்தும், பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.