ஆர்.கே.பேட்டை-நிரம்பியுள்ள ஏரியில் இளைஞர்கள் துாண்டில் மூலம் மீன் பிடிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ராகவநாயுடுகுப்பம் கிராமத்தில் உள்ள ஏரி, கடந்தாண்டு நவம்பர் மாதம் பெய்த தொடர் மழை மற்றும் பருவ மழையால் தண்ணீர் நிரம்பியுள்ளது.இந்நிலையில், ஏரியில் அப்பகுதி இளைஞர்கள் துாண்டில் போட்டு மீன் பிடிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.பொங்கல் விடுமுறை மற்றும் கொரோனோ தொற்றின் காரணமாக பள்ளி, கல்லுாரிகளுக்கு இம்மாதம் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஏரிக்கு சென்று மீன் பிடிக்கின்றனர்.காலை முதல், மாலை வரை ஏரியில் அதிகளவில் இளைஞர்கள் துாண்டில் முள்ளுடன் ஏரிக்கரையில் காத்திருந்து மீன் பிடித்து வருகின்றனர்.சில இளைஞர்கள் ஆபத்தான முறையில் ஏரியில் இறங்கியும் மீன் பிடிக்கின்றனர். எனவே போலீசார் மற்றும் பொதுப்பணித் துறையினர் ஏரியை கண்காணித்து ஆபத்தான முறையில் மீன் பிடிக்கும் நபர்களை எச்சரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.