காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் சிலவற்றை பிடித்து, மாநகராட்சிக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில், கடந்த வாரம் அடைத்தனர்.மாட்டு உரிமையாளர்கள், மாநகராட்சிக்கு அபராத பணத்தை செலுத்தி, தங்கள் மாடுகளை ஓட்டிச் சென்றனர். பல மாட்டு உரிமையாளர்களுக்கு, மாநகராட்சி சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. எனினும், முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.வாகன ஓட்டிகள் கூறியதாவது:நகரில் கால்நடைகள் வளர்ப்போர், அவரவர் சொந்த இடத்தில் கட்டி வளர்க்க வேண்டும். காலையில் பால் கறந்த பின், மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர். அவை, தெருக்களில் சுற்றி திரிகின்றன. நகர் பகுதியைபோல், முக்கிய சாலைகளிலும் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும். எப்போதாவது கணக்கிற்காக மாடுகளை பிடித்து, அப்படியே விட்டுவிட்டால் இதே நிலைதான் ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.