காஞ்சிபுரம்-காவலான்கேட் அருகே, பெரியார் நகர் பகுதிக்கு மாநகராட்சி தண்ணீர் வினியோகம் இல்லாததால் அப்பகுதி மக்கள், வந்தவாசி சாலையில் குடத்துடன் மறியலில் ஈடுபட்டனர்.காஞ்சிபுரம், காவலான் கேட் அருகில் உள்ள பெரியார் நகர் பகுதிக்கு, ஒரு வாரத்திற்கு மேலாக மாநகராட்சி தண்ணீர் வினியோகம் இல்லை.இதனால் அப்பகுதி மக்கள், நேற்று காலை, காலி குடங்களுடன் வந்தவாசி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.தகவல் அறிந்த விஷ்ணு காஞ்சி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதானம் பேசினர். பின், குடிநீர் வழங்கும் பொறுப்பாளரை வரவழைத்து, அவரிடம் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் முறையிட்டனர்.அதற்கு அவர், 'உங்கள் பகுதிக்கு செல்லும் குடிநீருக்கான ஆழ்துளை கிணற்று மின் மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளது. அதை மாற்றி, உடனடியாக தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்' என கூறியதை அடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.