வாலாஜாபாத்-வாலாஜாபாத் - காஞ்சிபுரம் நான்கு வழிச் சாலை ஓரத்தில், இருபுறமும் மழை நீர் கால்வாய் கட்டும் பணியை, நெடுஞ்சாலை துறையினர் துவக்கி உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் - திருத்தணி வரை, 105 கி.மீ., நீளமுடைய இரு வழி சாலை உள்ளது. வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், நான்கு வழியாக விரிவுபடுத்தும் பணியை, நெடுஞ்சாலைத் துறை துவக்கி உள்ளது.முதற்கட்டமாக, சதுரங்கப்பட்டினம் - செங்கல்பட்டு வரை, சாலை விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. இப்பணி, 2015ல் துவங்கி, 2018ல் முடிந்தது.இரண்டாம் கட்டமாக, 2018ல், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வரை விரிவாக்கம் செய்ய, நிலம் அளவீடு செய்யப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை ஓரமாக இருக்கும் மரங்கள் அகற்றப்பட்டு, விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இரண்டாவது கட்டமாக, வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலை ஓரம் இருக்கும் மரங்களை அகற்றும் பணியை, நெடுஞ்சாலைத் துறையினர் துவக்கி உள்ளனர். தொடர்ந்து, சாலை ஓரம் இருபுறமும், மழை நீர் வடி கால்வாய் கட்டும் பணியையும், அவர்கள் துவக்கி உள்ளனர்.