சிவகங்கை : கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கும், விளைச்சல் குறைந்த பயிர்களுக்கும் இழப்பீடு கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
தேவகோட்டை புளியால் பகுதியில் கனமழையால் நீரில் பயிர்கள் மூழ்கி அறுவடை செய்ய இயலவில்லை. நெற்பயிர் கதிர்விடும் காலத்தில் பெய்த மழையால், விளைச்சல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே உரம், விதை நெல் விலை உயர்வால் விவசாயிகளுக்கு செலவு அதிகமாகியுள்ளது.
அறுவடை இயந்திரத்தின் வாடகையும் உயர்ந்துள்ளது. தண்ணீர் உள்ள வயல்களில் வைக்கோல் நனைந்துள்ளதால், கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படுள்ளது.சூசை மாணிக்கம், விவசாயி, புளியால்: திடக்கோட்டை, பகையனி, பனங்குளம், சக்கநீதி, கற்களத்துார், திருப்பாக்கோட்டை பகுதிகளில் ஆர்.என்.ஆர், சோனம் ரக நெல் பயிரிடப்பட்டுள்ளது.
கண்மாய் அருகில் உள்ள வயல்கள் மழைநீரில் மூழ்கி 100 சதவீதம் சேதமானது.ஏக்கருக்கு 30 மூடை இருக்க வேண்டிய இடத்தில் 10 மூடை மட்டுமே விளைச்சல் கிடைத்துள்ளது. பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்ய வரும் அதிகாரிகள் தண்ணீரில் மூழ்கிய பயிர்களை மட்டும் பாதிப்பில் சேர்க்கின்றனர். விளைச்சல் குறைந்த பயிர்களையும் பாதிப்பாக கருதி உரிய இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.