திருப்புவனம் : திருப்புவனத்தில் காட்டுப்பன்றிகள் விவசாய நிலத்தை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பலரும் தலையில் ஸ்பீக்கருடன் காவல் காத்து வருகின்றனர்.திருப்புவனம் பழையூரில் 150 ஏக்கரில் விவசாயிகள் என்.எல்.ஆர்., கோ 51 ,ஜே.ஜி.எல்., 1798 உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிட்டுள்ளனர்.
இன்னும் 15 நாட்களில் அறுவடை தொடங்க உள்ள நிலையில் காட்டுப்பன்றிகள் நெற்கதிர்களை சேதப்படுத்தி வருகின்றன. காட்டுப்பன்றிகள் விளை நிலங்களை சேதப்படுத்துவதால் கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.பன்றிகளை விரட்ட விவசாயிகள் மாலை ஆறு மணி முதல்காலை ஆறு மணி வரை தலையில் ஸ்பீக்கருடன் வயல்களில் வலம் வருகின்றனர். அதிரடியான பாடல்கள் பதிவு செய்யப்பட்ட குரல்களை ஸ்பீக்கரில் ஒலிபரப்பியபடி மணிக்கொரு முறை சுழற்சி முறையில் விவசாயிகள் இரவு முழுவதும் காவல் காத்து வருகின்றனர்.விவசாயி ஈஸ்வரன் கூறுகையில்: ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் காட்டுபன்றிகளால் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
எனவே விவசாயிகள் ஆயிரத்து 500 ரூபாய் செலவில் பேட்டரியில் இயங்கும் ஸ்பீக்கர்களை வாங்கி வயல்களில் பரண் அமைத்து இரவு முழுவதும் காவல் காக்கிறோம். மணிக்கொரு முறை விவசாயிகள் ஸ்பீக்கரை ஆன் செய்தபடியே முழங்கால் வரையிலான காலணி அணிந்து, தகர டின்னை தட்டி ஒலி எழுப்பியும் வயல்களை சுற்றி வருகிறோம்,
நெல், வாழை, வெற்றிலை உள்ளிட்ட அனைத்துபயிர்களையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன , வனத்துறை காட்டுப்பன்றிகளைகட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.