நாச்சியாபுரம் : திருப்புத்துார் அருகே சிராவயலில் பொங்கலை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் 219 காளைகள் பங்கேற்றன. மாடு முட்டியதில் 61 பேர் காயமடைந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர். கட்டுப்பாடுகளை மீறி பார்வையாளர்கள் திரளாக கூடினர்.சிராவயல் மஞ்சுவிரட்டு நேற்று பொட்டலில் நடந்தது. .
அதிகாலை முதல் காளைகளும், பார்வையாளர்களும் வரத்துவங்கினர். கொரோனா தொற்று கட்டுப்பாடுகளால் அப்பகுதி முழுவதும் முக்கிய ரோடுகளில் போலீசார் சோதனைச் சாவடி அமைத்திருந்தனர். ரோடுகளில் வாகனங்களில் மக்கள் வருவது தடுக்கப்பட்டது. அனுமதியில்லாத மாடுகளும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் காடு பாதைகளின் வழியாக பலரும் திரளாக வந்து பங்கேற்றனர்.
இதனால் பொட்டல் முழுவதும் பார்வையாளர்கள் நிறைந்திருந்தனர்.காலை 11:00 மணிக்கு நாட்டார்கள் வேலுச்சாமி தலைமையில் முன்னோர் வழிபாடு முடித்து தொழுவிற்கு வந்து பூஜை நடத்தினர். தொடர்ந்து 12:00 மணிக்கு நாச்சியார் காளை அவிழ்க்கப்பட்டு மஞ்சுவிரட்டு துவங்கியது. அமைச்சர் பெரியகருப்பன், எம்.பி.,கார்த்தி, எம்.எல்.ஏ.,மாங்குடி, பா.ஜ., மாநில நிர்வாகி நாகராஜன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி, எஸ்.பி.,செந்தில்குமார், ஆர்.டி.ஓ.,பிரபாகரன் முன்னிலையில் மஞ்சுவிரட்டு துவங்கியது.
கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநர் நாகநாதன், உதவி இயக்குநர்கள் அய்யாத்துரை, ராம்குமார் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் காளைகளை பரிசோதனை செய்தனர். அதில் 223 காளைகள் சோதிக்கப்பட்டு 4 காளைகள் நிராகரிக்கப்பட்டது.கட்டுமாடுகள் காலை 9:00 மணி முதல் பரவலாக அவிழ்க்கப்பட்டன. செம்பனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தினர் மருத்துவ அலுவலர் ஆல்வின் ஜேம்ஸ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.மாடுகள் முட்டியதில் 61 பேர் காயமடைந்தனர்.
அதில் 17 பேர் பலத்த காயமடைந்து சிவகங்கை,தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.76 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். பெரும்பாலான காளைகள் பிடிபடாமல் சென்றன. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்கள், மாடு பிடித்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.திரண்ட பார்வையாளர்கள் திணறிய போலீசார்கொரோனா மூன்றாவது அலையால் சிராவயல் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான பல வழிநெறிமுறைகளை அரசு அறிவித்தது. ஜல்லிக்கட்டு வழி நெறிமுறைகளையே மஞ்சுவிரட்டுக்கும் கடை பிடிக்கப்பட்டது.
ஆனால் அது பலனளிக்கவில்லை. வழக்கமாக திரளாக மக்கள் திடலில் கூடுவதும், கட்டுமாடுகள் திடலைச் சுற்றிலும் அவிழ்ப்பதும் நடக்கும். இதனால் அப்பகுதியே கூட்டத்தில் அலைமோதும். பரவலாக போலீசார் சோதனைச்சாவடி, வாகனங்களில் சென்று பார்வையாளர்களை கட்டுப்படுத்தினாலும், வயல்,வரப்பு,தோட்டங்கள்,காடு பாதை வழியாக ஆயிரக்கணக்கானோர் திடலில் கூடிவிட்டனர். கட்டுமாடுகளும் பரவலாக அவிழ்த்து விடப்பட்டது. இதனால் வழக்கமான மஞ்சுவிரட்டு போலவே நடந்தது.