கோத்தகிரி:நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரான ஜான் சல்லிவனின், 167 வது ஆண்டு நினைவு தினம், மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.ஜான் சல்லிவன், 1788ல் லண்டனில் பிறந்தார். இவர், 1818, ஜன., மாதம் கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் முதல் கலெக்டர் அலுவலகத்தை நிர்மானித்தார். தொடர்ந்து, 1820ம் ஆண்டு ஊட்டிக்கு அலுவலகத்தை மாற்றினார்.நீலகிரியை உலகத்திற்கு அடையாளம் காட்டிய சல்லிவன், 1855 ஜனவரி, 17ல் மரணமடைந்தார். கோத்தகிரி கன்னேரிமுக்கு கிராமத்தில் அமைந்துள்ள இவரது நினைவகம், தற்போது, நீலகிரி ஆவண காப்பகமாக விளங்குகிறது.இந்நிலையில், சல்லிவனின், 167வது ஆண்டு நினைவு தினம், மாவட்ட நிர்வாகம் சார்பில், நேற்று அனுசரிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் அம்ரித் சல்லிவன் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில், தாசில்தார் காயத்ரி, பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், ஊர் தலைவர் ஆலாகவுடர் உட்பட, பலர் பங்கேற்றனர்.