பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, 'இல்லந்தோறும் திருக்குறள்' என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில், திருக்குறள் மரம் அமைக்கப்பட்டது.பொள்ளாச்சி அருகே பில்சின்னாம்பாளையம் அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையம் சார்பில், திருவள்ளுவர் தின விழா நடந்தது. அமைப்பினர் நிறுவனர் அம்சபிரியா தலைமை வகித்தார். அமைப்பாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, 1,330 திருக்குறள் எழுதிய பேப்பர், மரத்தின் கிளைகளில் ஒட்டப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டன. இதை, பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட்டனர். இந்த மரம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.திருக்குறள் முழுமையாக எழுதிய மாணவர்கள் பொதுமக்களுக்கு, திருக்குறள் ஆர்வலர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களை இலக்கிய வட்ட நிர்வாகிகள் பாராட்டினர். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன், ஏரிப்பட்டி பள்ளி ஆசிரியை கீதா, ஆசிரியர்கள் கனகராஜ், செந்தில்குமார் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.அமைப்பின் நிறுவனர் கூறுகையில், 'திருக்குறள் படிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. 'இல்லம் தோறும் திருக்குறள்' என்பதை நோக்கமாக கொண்டு, வீடு, வீடாக விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.திருக்குறளை படிக்க வைப்பதை நோக்கமாக கொண்டு, முழுமையாக எழுதியவர்களுக்கு விருது வழங்கி ஊக்குவிக்கிறோம்,' என்றனர்.