பொள்ளாச்சி:'பொள்ளாச்சியில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட், திருவள்ளுவர் திடல் உள்ளிட்ட பகுதிகளில், 200க்கும் மேற்பட்டோர் ஆதரவற்றோர்களாக உள்ளனர். கிடைக்கும் உணவை உண்டு, கிடைக்கும் இடத்தில் தங்கி வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.ஊர் முழுவதும் கொரோனா அச்சத்தால் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் என வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தினாலும்; இவர்கள் பாதுகாப்பாக உள்ளார்களா என கண்டறிய எவ்வித நடவடிக்கையும் இல்லை.இவர்களது பாதுகாப்பினை உறுதி செய்ய, கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் நடராஜ் தலைமையில், நிர்வாகிகள், ஆதரவற்றோர் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து குறிப்பு எடுத்தனர்.மேலும், கிருமிநாசினி வழங்கி கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்தியதுடன், முகக்கவசம் வழங்கினர். அமைப்பினர் கூறியதாவது:கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், ஆதரவற்றோர் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகின்றனரா என கண்காணிப்பு செய்வதில்லை. அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவும் இல்லை. இது குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும், முயற்சி எடுக்காதது வேதனை அளிக்கிறது.ஆதரவற்றோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.ஆதார் இல்லாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து, தடுப்பூசி செலுத்த வேண்டும். இதில் அரசுத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.அவர்களில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு இருந்தாலும், பரவல் அதிகமிருக்கும். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.இவ்வாறு, தெரிவித்தனர்.