வாழப்பாடி : சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தில், தடையை மீறி நடந்த வங்கா நரி ஜல்லிக்கட்டு குறித்து, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று, வங்காநரி பிடித்து கிராமத்திற்கு ஊர்வலமாக கொண்டு சென்று, கோவில் வளாகத்தில் ஓட விட்டு பொதுமக்களுக்கு காண்பித்த பிறகு, எருதாட்டம், விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.வங்காநரி வனவிலங்கு பட்டியலில் உள்ளதால், நரியை பிடிப்பதற்கு வனத்துறை தடை விதித்தது.
பாரம்பரிய நிகழ்வை கைவிட மனமில்லாத கிராம மக்கள், வங்காநரியை பிடித்து காணும் பொங்கலன்று, கிராமத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்து மக்களுக்கு காண்பித்து விட்டு, வனத்துறையினரிடம் நரியை ஒப்படைப்பதோடு, அபராதமும் செலுத்தி வருகின்றனர்.
நடப்பாண்டு காணும் பொங்கல் தினத்தன்று, ஞாயிறு ஊரடங்கு என்பதால், சின்னமநாயக்கன்பாளையம் கிராமமக்கள், நேற்று காலை வங்காநரி பிடித்து மேள வாத்தியம் முழங்க, கிராமத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர். பின், கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு காண்பித்து விட்டு, நரியை மீண்டும் பிடித்த இடத்திற்கே கொண்டு சென்று விட்டனர்.
இதன்பிறகு, எருதாட்டம், விளையாட்டு போட்டிகள் நடத்தி பொங்கல் பண்டிகையை கொண்டாடி நிறைவு செய்தனர்.தடையை மீறி வங்காநரியை பிடித்ததால், வாழப்பாடி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.