உடுமலை:உடுமலை அருகே, ஒட்டுக்குளத்தில் நீர் நிரம்பி பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் நிலையில், மீன்கள் தப்பிக்காமல் இருக்க வலை அமைத்துள்ளனர்.உடுமலை ஏழு குளம் பாசனத்திலுள்ள, குளங்களில், திலேபியா, கட்லா, ரோகு, மிர்கால் உள்ளிட்ட மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு, மீனவர்களால் பிடித்து விற்பனை செய்யப்படுகிறது.பொதுப்பணித்துறை சார்பில், மீன் வளர்க்க ஏலம் விடப்படுகிறது. தற்போது, ஒட்டுக்குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி காணப்படுவதோடு, பாசனத்திற்கும் மடைகள் வழியாக நீர் திறக்கப்படுகிறது.குளத்திலுள்ள மீன்கள் மற்றும் மீன் குஞ்சுகள், மடை மற்றும் உபரி நீர் வழிந்தோடி வழியாக வெளியேறுவதை தடுக்கும் வகையில், ஏலம் எடுத்துள்ளவர்கள், நீர் வெளியேறும் மடை பகுதியில், வலை தடுப்பு அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.இம்முறையால், மீன்கள் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. ஆனால், குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், கேரி பேக் உள்ளிட்டவையும் வீசப்படுவதால், அவையும் வந்து சிக்கிக்கொள்கின்றன. தினமும், கழிவுகளை அகற்ற வேண்டியுள்ளது, என குளத்தில் மீன் பிடிப்போர் தெரிவித்தனர்.