உடுமலை:கணிதப்பாடம் நடத்தும் முறை எப்படி என்பதை, துறை சார்ந்த வல்லுனர் வாயிலாக விளக்கி, கணித ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் மகிழ் கணித பயிற்சி அளிக்கப்பட உள்ளது.ஆசிரியர் - மாணவர் இடையேயான கற்றல் இடைவெளியை தவிர்க்க, அவ்வப்போது கல்வி துறையால் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.அவ்வகையில், கணித பாடம் படிக்கும் மாணவர்களுக்கு பாடத்தை பயமின்றி, எளிதாக படிக்க வைப்பது எப்படி என்பது குறித்தும், துறை சார் வல்லுனர் மூலம் கணித பயிற்சி அளிக்கப்பட உள்ளது.வரும், 20 மற்றும், 21ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும், மகிழ் கணித பயிற்சி எனும் பெயரில் பயிற்சி வகுப்பு நடக்கவுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பல பகுதியில் ஆசிரியர் சரிவர கணித பாடம் கற்பிக்காததால், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பலர் கணித பாடங்களை படிப்பதிலும், தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதில் தடுமாற்றம் உள்ளது. பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இதனால், ஆசிரியர்களுக்கு வல்லுனர்களை கொண்டு கணித பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது,' என்றனர்.