உடுமலை:உடுமலை நகர பகுதியில், பிரதான ரோடுகளை ஆக்கிரமித்து, நிரந்தர கடைகள் உருவாகியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.உடுமலையில், குறுகிய ரோடுகளில் அபரிமிதமான வாகன போக்குவரத்து உள்ளது. பிரதான ரோடுகள், பஸ் ஸ்டாண்ட், சந்தை, அரசு அலுவலகங்களை இணைக்கும் நகராட்சி ரோடுகளில், எந்நேரமும் வாகன நெரிசல் காணப்படுகிறது.
இந்நிலையில், வெங்கடகிருஷ்ணா ரோடு, கல்பனா ரோடு, சத்திரம் வீதி, ராஜேந்திரா ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகளில், நுாற்றுக்கணக்கான ஆக்கிரமிப்பு கடைகளால், ரோடு மேலும் குறுகலாகி, கடும் பாதிப்பு ஏற்படுகிறது.வெங்கடகிருஷ்ணா ரோட்டில், சிமென்ட் சீட், கட்டுமானங்கள் என நிரந்தர ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.அதிலும், மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மரை ஆக்கிரமித்து, இரும்பு பொருள் விற்பனை கடை அமைக்கப்பட்டுள்ளது.மின் வாரிய ஊழியர்கள் பழுது நீக்கும் பணி மேற்கொள்ள முடியாததோடு, மின் விபத்துக்கள் ஏற்பட்டால் கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கடைகளுக்கு வருபவர்கள், ரோட்டின் இரு புறமும் வாகனங்கள் நிறுத்த முடியாத சூழலும் ஏற்படுகிறது.
அதே போல், பஸ் ஸ்டாண்டிலும் அபரிமிதமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. பயணிகள் நடந்து செல்லும், பாதை முழுவதும், கடைகள் மயமாக மாறியுள்ளதால், மக்கள் நடக்க இடமில்லை. பஸ்கள் மற்றும் பயணிகள் நிற்கும் பகுதியில், இரவு நேரங்களில் தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பும் அதிகரிக்கிறது.ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.