ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்பில் யானை தாக்கி இறந்த பாகனுக்கு, அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.பொள்ளாச்சி டாப்சிலிப், கோழிகமுத்தி மற்றும் வரகளியாறில், யானை முகாம்கள் உள்ளன. கோழிகமுத்தி பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 45. பாகன் பணி செய்யும் இவர், 12 வயதான அசோக் என்ற யானையை பராமரித்து வந்தார்.நேற்று முன்தினம், அசோக் யானைக்கு மதம் பிடித்தது; ஆறுமுகம் யானையை கட்டுப்படுத்த முயன்ற போது, யானை அவரை துாக்கி வீசியதில் படுகாயமடைந்து இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து, நேற்று காலை டாப்சிலிப் வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையில், ஆறுமுகம் குடும்பத்திற்கு ஈமச்சடங்கிற்காக, 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆறுமுகம் பணியில் இருக்கும்போது இறந்ததால் விரைவில் அரசு சார்பில், 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.