பல்லடம்: ''திருப்பூரை, சிங்கப்பூருக்கு இணையாக மாற்றுவதே பிரதமரின் திட்டம்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
பஞ்சாப் சம்பவத்தை கண்டித்து, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடந்த பா.ஜ., மனித சங்கிலி போராட்டத்தின்போது, பிரதமர் குறித்து, ஒருவர் அவதுாறாக பேசியதுடன், பா.ஜ., நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனால், ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, பா.ஜ., மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் ரமேஷ், தெற்கு ஒன்றிய தலைவர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று கைது செய்யப்பட்ட இருவரின் இல்லங்களுக்கும் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அண்ணாமலை அளித்த பேட்டி:
பா.ஜ., மண்டல நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவம், முற்றிலும் அரசியல் சூழ்ச்சியே. யாரையோ சந்தோஷப்படுத்த போலீசார் செய்தது பா.ஜ.,வுக்கு சாதகமாக முடிந்தது. 'ரியாலிட்டி ஷோ' என்ற பெயரில், சில 'டிவி' நிறுவனங்கள் குழந்தைகளின் மனதில் அரசியலை புகுத்துவதை கண்டிக்கிறேன்.
நுால் விலை ஏற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காதது மாநில அரசின் தவறு. இதற்காக, ஜன., 21ல் திருப்பூரில் உண்ணாவிரத போராட்டமும், 25ம் தேதிக்கு பின், தொழில் துறையினரை மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் சந்திக்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எதற்கெடுத்தாலும் மத்திய அரசை கைகாட்டிவிட்டு, மாநில அரசு தப்பிக்க முயற்சிக்கிறது. திருப்பூரை சிங்கப்பூருக்கு இணையாக மாற்றும் திட்டம் பிரதமரிடம் உள்ளது. தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று, மூன்று நாட்களில் ஜி.எஸ்.டி., உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.