கோவை: கோவையில், வரும், 21ல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தேசித்துள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கோவை - செட்டிப்பாளையம் பைபாஸ் ரோடு அருகே, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இடத்தில், இந்தாண்டு, வரும், 21ல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் மைதானத்தில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கலெக்டர் சமீரன், எஸ்.பி., செல்வநாகரத்தினம் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை.மொத்தம், 300 மாடுபிடி வீரர்கள், 500 காளைகள் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
மைதானத்தில் வாடிவாசல் அமைக்கும் பணி உள்ளிட்ட முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. காளைகளுக்கு அனுமதி சீட்டு வழங்குமிடம், மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி சீட்டு வழங்குமிடம், வீரர்கள் காயமடைந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம், 108 ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்த இடம் ஒதுக்கப்படுகிறது.காளைகள் கட்டி வைக்கப்படும் பகுதிகளை துாய்மையாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காளைகளின் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், 2 'டோஸ்' தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் ஆய்வு செய்வது போன்ற கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர், வருவாய் மற்றும் போலீசார் இணைந்து செய்து வருகின்றனர்.