ஈரோடு: வள்ளலின் வாரிசுகள் இயக்கத்தின் துவக்க விழா ஈரோட்டில் நடந்தது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி, ஈரோடு கொல்லம்பாளையத்தில், வள்ளலின் வாரிசுகள் இயக்க துவக்க விழா நேற்று நடந்தது. இயக்கத்தின் நிறுவனரும், தலைவருமான வேங்கை ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மக்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை. 25 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. லெனின் வீரபாண்டியன், கேபிள் குட்டி, பெருந்துறை மூர்த்தி, கலை மோகன், சூரம்பட்டி மனோகர், வானவில் மனோகர், சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து வேங்கை ராஜேந்திரன் கூறியதாவது: எம்.ஜி.ஆரின் கருத்து, சிந்தனை, லட்சியங்கள் அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில், இந்த இயக்கம் செயல்படும். ஏழை, எளிய மக்களின் துயரங்களை போக்கிட, அடிப்படை பிரச்னைகளை தீர்க்க இயக்கம் பாடுபடும். இந்த இயக்கம் கட்சி சார்பற்றது. இவ்வாறு அவர் கூறினார்.