ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பொது - பெண்ணுக்கும், பவானி மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி பொது - பெண்ணுக்கும், புஞ்சை புளியம்பட்டி நகராட்சி எஸ்.சி., - பொதுவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நடக்க உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தலைவர் பதவி, ஆண், பெண், பொது மற்றும் ஜாதிய சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து, நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாநகராட்சி பொது - பெண்ணுக்கும், சத்தியமங்கலம் மற்றும் பவானி நகராட்சிகள் பொது - பெண்ணுக்கும், புஞ்சை புளியம்பட்டி நகராட்சி எஸ்.சி., - பொது என ஒதுக்கீடு செய்துள்ளனர். கோபி நகராட்சி இதுவரை பெண்ணாக இருந்ததால், பொதுவாக மாற்றப்பட்டுள்ளது. ஆண், பெண் என யாரும் போட்டியிடலாம். மாவட்டத்தில் உள்ள, 42 பேரூராட்சியில், கிளாம்பாடி பேரூராட்சி எஸ்.சி., பெண் என ஒதுக்கீடு செய்துள்ளனர். பாசூர், கூகலூர், அவல்பூந்துறை, வெங்கம்பூர், கொடுமுடி, காஞ்சிகோவில், காசிபாளையம் - கோபி, எலத்தூர், சிவகிரி, நசியனூர், அரியப்பம்பாளையம், பெத்தாம்பாளையம், சென்னிமலை, மொடக்குறிச்சி, நல்லாம்பட்டி, வடுகப்பட்டி, சித்தோடு, பள்ளபாளையம், அத்தாணி, லக்கம்பட்டி, ஆப்பக்கூடல் என, 21 பேரூராட்சிகள் பொது - பெண் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றவை பொது என்ற பட்டியலில் இடம் பெறும்.