ஈரோடு: தைப்பூச திருவிழா ஈரோடு, திண்டல் மலை வேலாயுத சுவாமி கோவிலில், வெகு விமரிசையாக நடக்கும். இந்நாளில் நூற்றுக்கணக்கான முருக பக்தர்கள், பால்குடம், தீர்த்தம் சுமந்தும், காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து வழிபடுவர். தைப்பூச தினமான இன்று, கொரோனா மூன்றாம் அலையால், கோவிலில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினசரி பூஜை மட்டுமே, பக்தர்கள் இல்லாமல் நடக்கும் என்று, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை, படிவழிபாதை ஆகியவை அடைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோபி பச்சமலை, பவளமலையிலும், இன்று தைப்பூச விழாவில், பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு கோவில்களிலும் மக்கள் நுழையாதபடி, மலைப்பாதை மற்றும் படி மண்டபங்களில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான பூஜை மட்டும் நடக்கும். திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் நடக்காது என அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.