ஓசூர்: சூளகிரி, பெரியபள்ளத்தை சேர்ந்த விவசாயி நந்தியப்பன், 45; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ரமேஷ், 43, என்பவரது மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. இதையறிந்த ரமேஷ், பலமுறை நந்தியப்பனை கண்டித்தும் அவர் கைவிடவில்லை. கடும் ஆத்திரத்திலிருந்த ரமேஷ், நேற்று பிற்பகல், 3:30 மணிக்கு, சின்னார் நோக்கி பைக்கில் சென்றார். அப்போது, சின்னார் - முருக்கனப்பள்ளி சாலையிலுள்ள தரைப்பாலம் அருகே நந்தியப்பன் நின்றிருப்பதை கண்டார். பைக்கை நிறுத்தி விட்டு அவரிடம் சென்ற ரமேஷ், தன்னிடமிருந்த அரிவாளால் நந்தியப்பனை வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்த புகார்படி கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த சூளகிரி போலீசார், ரமேஷை கைது செய்தனர்.